கரூர் கூட்ட நெரிசல் x page
தமிழ்நாடு

கரூர் துயரம் குறித்து சர்வதேச விசாரணை தேவை.. ஐநா மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை!

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் 41 பேர் பலியான விவகாரம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் எதிரொலித்துள்ளது.

Rishan Vengai

கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என ஐநா மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காவல்துறை மற்றும் தவெக தரப்பின் குற்றச்சாட்டுகளால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை, காவல்துறையின் அறிவுறுத்தல் படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

தவெக விஜய் பரப்புரை பேருந்து

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நேர்மையான மற்றும் உண்மையான வழக்கு விசாரணையை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டும், அதனை கண்காணிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்க்குழுவை நியமித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்தசூழலில் இவ்விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை..

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் நிகழ்வில், கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரூர் துயரச் சம்பவம்

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள்ஆணையக் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்ட சமூக மேம்பாடு மற்றும் சமூக வலுவூட்டலுக்கான சங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் கோவிந்தசாமி, கரூர்நிகழ்வில் அடிப்படை மனித உரிமை கூட மீறப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தவிபத்து நேரிடக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாகத் தவறுகளையும் எடுத்துக்காட்டி சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டார்.