சென்னையின் மையப் பகுதியாக கிண்டி இருக்கும் நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில் பாதையிலும், தாம்பரம்-பிராட்வே பேருந்து வழித்தடத்திலும், சென்னை விமான நிலையம்-விம்கோ நகர் மெட்ரோ வழித்தடத்திலும் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. கிண்டியை சுற்றி பல்வேறு ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இருப்பதால், ரயில், மெட்ரோ மற்றும் பேருந்து நிலையங்களை தினசரி சுமார் ஒரு லட்சம் பேர் பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது.
ஏற்கெனவே அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 13.50 கோடி ரூபாயில் கிண்டி ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், கிண்டி ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டியுள்ள சுரங்கப்பாதை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு 3.43 ஏக்கரில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து முனையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கிண்டி பேருந்து நிலையத்தை, பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றி நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் பிரமாண்ட நடைமேடை மேம்பாலம், வெளிப்புற நடைபாதைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதற்கான, சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு, ஆய்வு அறிக்கை தயாரிப்பு பணி தொடங்கப்படுமென அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.