child sexual harassment web
தமிழ்நாடு

கோவை | 2021 முதல் 2026 வரை.. தொடரும் சிறார் மீதான வன்கொடுமைகள்! தீர்வுதான் என்ன?

கோவையில் கடந்த 2021 முதல் தொடர்ந்து சிறுமிகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் பெரிதாக வெடித்தாலும், தொடர்ந்து நடைபெற்றுவரும் வண்ணமே இருப்பது என்னதான் தீர்வு என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Rishan Vengai

2021 முதல் 2026 வரை கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் சிறார்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. சரவணம்பட்டி, புறநகர், போத்தனூர், பொள்ளாச்சி, குனியமுத்தூர், சூலூர் போன்ற பகுதிகளில் 7 முதல் 17 வயது சிறுமிகள், சிறுவர்கள் பலியாகியுள்ளனர். மக்கள் போராட்டம் தொடர்ந்தும், அரசு, காவல்துறை நடவடிக்கைகள் போதவில்லை என்ற கேள்வி எழுகிறது.

குற்றங்களுக்கு எதிராக கோவை பிராந்தியம் தொடர்ந்து கடும் எதிர்வினையாற்றி வருகிறது. எப்போதெல்லாம் அதிர வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் கோவை பிராந்திய மக்கள் கடும் நடவடிக்கை கோரி வீதியில் இறங்குகிறார்கள். ஆனால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை எனும் சூழலில், அவலங்களும் தொடர்ந்து நீடிக்கிறது.

2021 முதல் வெடித்த சிறார் வன்கொடுமைகள்..

2021ஆம் ஆண்டு கோவை சரவணம்பட்டிபகுதியில், 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

2022இல் கோவை புறநகர் பகுதியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2023ஆம் ஆண்டு, போத்தனூர் பகுதியில் கடைக்குச்சென்ற 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் குற்றவாளிக்கு நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை வழங்கியது.

சிறுமி வரைபடம்

2024இல், பொள்ளாச்சி அருகே 10 முதல் 12 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுமிகளும், சிறுவனும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் சிறார் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

2025இல் குனியமுத்தூர் பகுதியில், 17வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இவ்வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வரிசையில், தற்போது சூலூர் அருகே 10 வயது சிறுமிபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.