சென்னை உயர்நீதிமன்றம் முகநூல்
தமிழ்நாடு

”பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சொல் கூட பாலியல் துன்புறுத்தல்தான்“ - சென்னை உயர்நீதிமன்றம்!

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் சொல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

PT WEB

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் சொல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் அதிகாரி பாலியல் தொல்லை அளித்ததாக 3 பெண்கள் புகார் அளித்தனர். இதனை விசாரித்த நிறுவனத்தின் விசாகா குழு, அதிகாரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக்கூடாது என பரிந்துரைத்தது.

இதனை எதிர்த்து, சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தை நாடிய அதிகாரி தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். இதனை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெண்களின் மேஜைகளுக்கு பின்னால் நின்று குற்றம் சாட்டப்பட்ட நபர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை குழு முன்பாக தெளிவாக கூறியதாகவும் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேநேரத்தில், பாலியல் துன்புறுத்தல் செய்யும் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், உயர் அதிகாரி என்ற முறையில் பெண்களை கண்காணித்ததாக அதிகாரி தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் செயல் அல்லது சொல்லும் கூட, சட்டப்படி பாலியல் துன்புறுத்தல்தான் என்று தெளிவுபடுத்திய நீதிபதி விசாகா குழு பரிந்துரைகள் செல்லும் என உத்தரவிட்டார்.