தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்குள் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து காவிரி படுகை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. நேற்றிரவு முதலே டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்தான், இந்த மழை மதியம் ஒரு மணி வரை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.