செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைகளை ஒட்டுமொத்தமாக பறித்துவிட முடியாது. அதேநேரத்தில், ஐடி, வங்கி மற்றும் பிபிஓ உள்ளிட்ட துறைகளில் ஆரம்பநிலை வேலைவாய்ப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐஐடி சென்னை வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னை ஐஐடி வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையத்தின் கீழ் இயங்கும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மையம் (CeRAI), சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ஆளுகை குறித்த உலகளாவிய தொழில் துறை மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சென்னை ஐஐடி ஏ.ஐ. துறைத் தலைவா் பலராமன் ரவீந்திரன், ஐஐடி-யின் ‘தகவல் மற்றும் சமூக மையத்தின்’ நிா்வாகத் தலைவா் வி.எஸ்.ஸ்ரீவித்யா, ஏஐ மைய மூத்த ஆலோசகா் கே.எஸ்.வேங்கடராகவன், ஆராய்ச்சி இயக்குநா் கோகுல் எஸ்.கிருஷ்ணன் ஆகியோா் தயாரித்துள்ள ’இந்திய வேலைவாய்ப்புகளில் ஏஐ ஏற்படுத்தும் தாக்கம்” என்ற வெள்ளை அறிக்கையை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வெளியிட்டார்.
மனிதர்களின் பணிகளை ஏஐ எவ்வாறு செய்கிறது? பணிகளின் தன்மையை ஏஐ எவ்வாறு மாற்றியமைக்கிறது? என சமூகத்தில் ஏற்படுத்தும் ஏஐ தாக்கம் குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலையின் சில குறிப்பிட்ட பகுதிகளை ஏஐ கையாளும்; எஞ்சிய முக்கியப் பணிகளை மனிதர்களே தொடர்ந்து செய்வார்கள் என ஆய்வாளர்கள் அதில் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, பிபிஓ மற்றும் கால் சென்டர்களில் வாடிக்கையாளர்களின் வழக்கமான கேள்விகளுக்குப் பதிலளிப்பது, பதில்களைத் தயாரிப்பது போன்ற பணிகளை ஏஐ தொழில்நுட்பத்தால் மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில், ஏஐயைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்பவர்கள் மற்றும் மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் தேவைப்படும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குப் புதிய வாய்ப்புகளும் உருவாகும். மாறிவரும் வேலைச்சூழலுக்கு ஏற்ப தொழிலாளர்களுக்குப் புதிய திறன்களைக் கற்றுக்கொடுப்பது, புதிய வேலைவாய்ப்புகளுக்கான பயிற்சிப் பாதைகளை உருவாக்குவது எனவும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வெள்ளை அறிக்கை குறித்துப் பேசியுள்ள ஐஐடி செயற்கை நுண்ணறி மையத் தலைவர் பாலராமன் ரவீந்திரன், ”வேலை செய்யும் முறைகளை மறுவடிவமைக்காவிட்டால், ஆரம்பநிலை வேலைவாய்ப்புகள் குறையக்கூடும். அதேநேரத்தில், ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை முழுமையாகப் பறித்துவிடும் என்று கருதக்கூடாது.. ஒவ்வொரு பணியிலும் சில செயல்பாடுகளை மட்டுமே ஏஐ மேற்கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு வேலைகளைப் பறித்துவிடும் என்ற கருத்து தவறானது என்பதையே இந்த அறிக்கையானது சுட்டிக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஐஐடி செயற்கை நுண்ணறிவு பொறுப்பு மையத்தின் ஆராய்ச்சி இயக்குநர் கோகுல் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், "ஏஐ என்பது தனிப்பட்ட ஒரு பணியை செய்து முடிக்கும். அது ஒட்டுமொத்த தொழிலையும் செய்யாது. அதாவது ஒரு பணியை ஏஐ மேற்கொள்வதால் மட்டும் ஒட்டுமொத்த வேலையும் அழிந்துவிடும் என்று கருத முடியாது. தொழில்நுட்பத்தின் திறன், அதைச் செயல்படுத்துவதற்கான செலவு, பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் நிறுவனங்கள் வேலைகளை மறுசீரமைக்கும் விதம் ஆகியவற்றைப் பொறுத்தே வேலைவாய்ப்புகளில் ஏஐ ஏற்படுத்தும் தாக்கம் அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.