இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவர் வி.ஆர் முத்து உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 72. விருதுநகரை இந்தியாவில் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய நகராக மாற்றியதில் முக்கியமானவர் தொழிலதிபர் வி.ஆர். முத்து. அவர் மரணம் காரணமாக விருதுநகர் சோகத்தில் மூழ்கியுள்ளது.
அக்டோபர் 6, 1953 அன்று விருதுநகரில் பிறந்த வி.ஆர்.முத்து, தமிழ்நாடு மட்டுமன்றி உலக அளவில் நல்லெண்ணெய் விற்பனையில் புகழ்பெற்ற இதயம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. லூஸ் எண்ணெயாக விற்கப்பட்டு வந்த நல்லெண்ணெயை 1986-ஆம் ஆண்டு தனது தந்தை வி.வி.வி. ராஜேந்திரன் இணைந்து இதயம் நல்லெண்ணெய் பிராண்டைத் தொடங்கினார். மேலும் இவரது தலைமையில் இதயம் குழுமம் நல்லெண்ணெய் மட்டுமின்றி 'மந்த்ரா' கடலை எண்ணெய் மற்றும் பிற சமையல் எண்ணெய் வகைகளையும் அறிமுகப்படுத்தி, 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்தது.
இலக்கியவாதி, பேச்சாளர், ரோட்டரி சங்கத்தில் தன்னார்வ தொண்டர் எனப் பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்த வி.ஆர். முத்து கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்து சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2 மணி அளவில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான விருதுநகருக்கு இறுதி அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விருதுநகரை இந்தியாவில் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய நகராக மாற்றியதன் பெருமை முத்துவையே சாரும். சிறந்த தொழிலதிபருக்கான JCI உள்ளிட்ட முக்கிய விருதுகளை பெற்ற முத்து, சமையலறை பொருட்களை பிராண்டாக மாற்றி வெகுஜன மக்களை வாடிக்கையாளர்களாக சேர்த்தவர்களில் இந்தியாவில் முன்னோடியா பார்க்கப்படுகிறார். அவர் மரணம் காரணமாக தொழில் நகரான விருதுநகர் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இது தொடர்பாக இதயம் குழுமம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் “எங்கள் அன்புக்குரிய தலைவர் வி. ஆர். முத்து ஐயா காலமானார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம். அவரது தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.