டவரில் ஏறி போராட்டம் நடத்திய  பெருமாள்
டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெருமாள் PT WEB
தமிழ்நாடு

அன்று மனைவியை சேர்த்து வைக்கக் கோரி டவரில் ஏறிய கணவன்; இன்று அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோட்டம்!

விமல் ராஜ்

புதுக்கோட்டை செய்தியாளர் - முத்துப்பழம்பதி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (46). இவரது மனைவி சாந்தி. இவர்கள் இருவரும் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சாந்தி கோபித்துக்கொண்டு கணவனைப் பிரிந்து நெய்வேலியில் உள்ள தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சாந்தியின் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து பெருமாளுடன் சேர்த்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளனர். சாந்தி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெருமாள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அம்புகோவில் முக்கத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறிக்கொண்டு, தனது மனைவி சாந்தியை தன்னுடன் செய்து வைக்கக் கோரி, தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்து வந்த, தீயணைப்புத்துறையினர் பெருமாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

பெருமாள்

இந்தநிலையில், சாந்தி இன்று கறம்பக்குடி வள்ளுவர் திடலில் உள்ள இரும்பு கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அங்குச் சென்ற பெருமாள் சாந்தியிடம் "சேர்ந்து வாழலாம்" எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அதற்குச் சாந்தி மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த பெருமாள் தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து சாந்தியைத் தலை மற்றும் காலில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சாந்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த சாந்தி மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

காயமடைந்த சாந்தி

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பெருமாளைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனுடன் வாழ மறுத்த மனைவியைக் கணவன் அரிவாளால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.