ரயில் சேவை pt desk
தமிழ்நாடு

தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் சேவையை தொடங்குவதில் தாமதம்.. எங்கு சிக்கல்?

தென் மாவட்டங்களுக்கு நான்கு ரயில் பாதைகள் தேவைப்படும் நிலையில், இரண்டு பாதைகள் மட்டுமே இருப்பதால், கூடுதல் ரயில் சேவையை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

PT WEB

தமிழகத்தின் கனவு திட்டமான, சென்னை எழும்பூர் –கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு,  2021இல் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் தொடங்கப்பட்டது.  பின், மதுரை - திருநெல்வேலி, நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணியை, 2022இல் முடிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.  அதன்பின், பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்ததால், கடந்த ஆண்டு அக்டோபரில் பாதை தயாரானது.  இருப்பினும், இந்த இரட்டை வழித்தடத்தில், கடந்த மார்ச்சில்தான் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.  ஆனாலும், தேவை அதிகம் உள்ள தென்மாவட்ட வழித்தடங்களில், கூடுதல் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்காமல் உள்ளன.

ரயில்

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு தற்போது இயக்கப்படும் விரைவு ரயில்கள் போதுமானதாக இல்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். சென்னை - கன்னியாகுமரி இடையே பல ஆண்டுகளாக நடந்துவந்த இரட்டை பாதை பணிகள் முடிந்து, தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், பயணியர் தேவை கருதி, தென்மாவட்டங்களை இணைக்க, கூடுதல் ரயில் பாதைக்கும் திட்டமிடவேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

இப்போது திட்டமிட்டால்தான், அடுத்த ஐந்துஆண்டுகளில் பணிகளை முடிக்கமுடியும். திருவனந்தபுரம், கன்னியாகுமரியில் இருந்து, கடலோரமாக சென்னையை இணைக்கும் புதிய ரயில் பாதைக்கு, 'சர்வே' முடித்து, பல ஆண்டுகளாககிடப்பில் உள்ளது. இந்த ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த, தமிழக எம்.பி.,க்கள் அழுத்தம் தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். இந்தசூழலில், கூடுதல் ரயில்களை இயக்க, கூடுதல் பாதைகள் அவசியம் என ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.