grilled chicken
grilled chicken pt
தமிழ்நாடு

“என்னங்க.. ஒரே கெட்டுப்போன ஸ்மெல் வருது” “அட அதுவா நேத்து செஞ்ச சிக்கனுங்க”-பெரம்பலூரில் அதிர்ச்சி!

யுவபுருஷ்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர் திசையில், பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது.இந்த ஹோட்டலுக்கு சென்றவர் ஒருவர், கிரில் சிக்கன் மற்றும் சப்பாத்தி பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று சாப்பிடலாம் என்று பார்சலை பிரித்து பார்த்தபோது, சிக்கனிலிருந்து கெட்டுப்போன வாடை அடித்துள்ளது.

இதனால், உடனடியாக ஹோட்டலுக்குச் சென்ற அவர், ஹோட்டல் பணியாளர்களிடம் விசாரித்துள்ளார். அங்கு இருந்த பணியாளரோ, “அந்த சிக்கன் நேற்று செய்தது” என கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், “இந்த சிக்கன உங்க பிள்ளைகளுக்கு கொடுப்பீங்களா” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் சென்ற வாடிக்கையாளர் புகார் அளித்த நிலையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களான சின்னமுத்து மற்றும் கதிரவன் ஆகியோர் சம்மந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இறுதியாக அங்கு செய்யப்பட்டிருந்த சிக்கனை ஆய்விற்காக எடுத்து சென்றனர். கெட்டுப்போன உணவால் உடல்நல பாதிப்பு தொடங்கி உயிரிழப்பு வரை ஏற்படும் சூழலில் கெட்டுப்போன சிக்கனை பார்சலாக கொடுத்த உணவகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.