ஒய்.பிரகாஷ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

”கல்குவாரி இருப்பது நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்யத் தயார்” - ஓசூர் திமுக எம்.எல்.ஏ. சவால்!

”எனக்குச் சொந்தமாகக் கல்குவாரி இருப்பது நிரூபிக்கப்பட்டால் என்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என ஓசூர் திமுக எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

PT WEB

தனியார் இதழில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனிம வளம் கடத்தப்பட்ட பின்னணியில் ஓசூர் எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.பிரகாஷ் இருப்பதாகச் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ஓசூரில் உள்ள செய்தியாளர்களைச் சந்தித்த ஒய்.பிரகாஷ், ”எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்தச் செய்தியை பரப்பிய ஜூனியர் விகடன் நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்க்கொள்ள அவதூறு வழக்குத் தொடரப்படும். ஓசூர், தளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் அறிமுகமான தன்னை, தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்திய ஜூனியர் விகடனுக்கு நன்றி. இதுவரை எவ்வித சர்ச்சையோ, ஊழலோ, புகாரோ இல்லாவதவன் நான். அது, மாவட்டத்தில் உள்ள ஊடக நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும்.

மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ள என்மீது உண்மைக்குப் புறம்பான செய்தி பரப்பப்படுகிறது. செய்தி வெளியிட்டவர்கள் மீதும், அதனை வெளியிட காரணமானவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு எவ்வித கிரானைட் தொழிற்சாலையோ, கல்குவாரியோ இல்லை. அப்படி நிரூபித்தால் நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் என்னைச் சார்ந்தவர்கள் வேறு தொழில் செய்யக்கூடாது என உள்ளதா? அவர்கள் செய்யும் தொழிலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இதுகுறித்து அனைத்து ஆவணங்களும் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.