சட்டமன்றம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தனித்தீர்மானம் நிறைவேற்றம் முதல் செல்லூர் ராஜுவுக்கு சபாநாயகரின் பதில் வரை... சட்டமன்றத்தில் இன்று!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்...

ஜெ.நிவேதா

செய்தியாளர்: ஸ்டாலின்

இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதற்கு முன்னதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்...

தனித்தீர்மானம்:

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை திரும்பப்பெற வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்துடன் தனித்தீர்மானத்தில், “இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள் 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள் 2025 ஆகியன தேசியகல்விக் கொள்கை 2020-ல் உருவாக்கப்பட்டுள்ளன.

அடிப்படையில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர்க் கல்வி கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசின் கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உரையை வாசித்து தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். தனது உரையில் முதல்வர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் பேசினார்.

காட்சிப்படுத்தப்படாத அதிமுக-வினர் 

சட்டப்பேரவை கருப்பு சட்டை அணிந்து வந்ததால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் போது அதிமுக உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக காட்சிப்படுத்தப்படவில்லை.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், கேள்வி நேரம், முக்கிய தீர்மானங்கள் மீதான விவாதங்களின் போது மட்டும் அவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து பங்கேற்று வருகிறார்கள். ஆகவே சட்டப்பேரவை கேள்வி நேரத்தை நேரலை செய்யும் போது அதிமுக உறுப்பினர்கள் காட்சிப்படுத்தாமல் புறக்கணிக்கப்படுகின்றனர். கருப்பு சட்டை அணிந்துள்ள காரணத்தினால் அதிமுக உறுப்பினர்கள் காட்சிப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

இதை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா திரு. ஸ்டாலின் அவர்களே? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? யார் அந்த SIR? என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன், யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு?

மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை! தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல!” எனப்பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உட்பட 4 பேர்  வெள்ளை நிற சட்டை அணிந்து வந்துள்ளார்கள். அவர்கள் நேரலையில் காட்டப்படுகின்றனர்.

“ரூ 946.43 கோடி மதிப்பில் வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள்” - அமைச்சர் நேரு

சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேசிய ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, “ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் குழாய்கள் பழமையானதாக உள்ளதால், அவற்றில் இருந்து கழிவு நீர் கசிந்து குடிநீரில் கலக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதத்தில், பழமையான கழிவு நீர் குழாய்களை அகற்றி புதிய குழாய்களை அமைத்து தர வேண்டும்” என கோரினார்.

அமைச்சர் கே.என்.நேரு

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நேரு, “946.43 கோடி ரூபாய் மதிப்பில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடசென்னை பகுதியில் கழிவுநீர் குழாய்கள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானதாக உள்ளதால் அதனை மாற்றும் பணி வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட உள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் 2026 ம் ஆண்டு முடிவடையும் போது வட சென்னை மக்கள் முழுமையாக பயனடைவார்கள்” என தெரிவித்தார்.

“சென்னையில் இந்தாண்டு 7வது மாதம் வரை குடிநீர் பிரச்னை இருக்காது” - அமைச்சர் கே.என்.நேரு

ராயபுரம் தொகுதி கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, “சென்னைக்கு தற்போது தேவையான குடிநீர் கொள்ளளவு 13.22 டிஎம்சி. ஆனால் தற்போது 15.560 டிஎம்சி குடிநீர் கொள்ளவு உள்ளது. போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டின் 7 வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது. திமுக ஆட்சிக்கு வந்தபோது சென்னையில் குடிநீர் 900 எம்.எல்.டி வழங்கப்பட்டது. தற்போது 1040 எம்.எல்.டி அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என பதில் அளித்தார் 

“இந்த ஆண்டில் இந்த தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்க திட்டம்” - அமைச்சர் எ வ வேலு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “போளூர் புறவழிச்சாலை பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படுமா? வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எ வ வேலு, “போளூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. பணிகள் முடிந்த உடன் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலைகளை மாநில அரசால் இணைக்க முடியாது, இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது. அதன் விளைவாக, இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எவ வேலு

விரைவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கான கிராம சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அதில் 25 சதவீத பணிகள் மட்டுமே மீதமுள்ளது, அந்த பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும்” என தெரிவித்தார்.

“ஆட்சியில இருக்கும் போது ஞாபகம் வரலயா?” - செல்லூர் ராஜுவுக்கு சபாநாயகர் கேள்வி!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு, “6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த பி.கே. மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது சொந்த ஊரான பாப்பாரப்பட்டியில் திருவுருவச் சிலையும், அங்குள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு அமைச்சர் பதில் சொல்வதற்கு முன்பாக குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது வராத ஞாபகம் தற்போது வந்துள்ளது” எனக் கூறினார். தொடர்ந்து பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், “உறுப்பினரின் கோரிக்கையின் படி வரும் ஆண்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

“கொஞ்சம் அதை பண்ணிக்கொடுங்கண்ணா”

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், தன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு அணை கட்டித்தருமாறு வேண்டுகோள் வைத்தார். மேலும், “கொஞ்சம் அதை பண்ணிக்கொடுங்கண்ணா” என்று அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு அமைச்சர் “அவர் வைத்த கோரிக்கைகளில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன்” என்றார்.