no action taken in tvk mla case  PT
தமிழ்நாடு

ஜூலை மாதமே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தவெக MLA வழக்கில் நீதிபதி கேள்வி!

பெண் ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் ஆட்சியர் ஜூலை மாதமே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Praveen Joshva L

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஜூலை மாதமே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையை ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பியதாகவும், முறையற்ற வகையில் நடந்துகொண்டு துன்புறுத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இவ்விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட பெண் ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், மாவட்ட ஆட்சியரின் கணவர் தலைமை செயலரிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர்களும் தவெக அரசுக்கு கடும் கண்டனம் எழுப்பியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக பரவிய தகவல்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பெண் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் நேற்று விசாரித்தபோது, ஆட்சியரிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, அறிக்கையை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து ஜூலை மாதமே ஆட்சியர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், அப்படி எடுத்திருந்தால் ஆட்சியர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்க மாட்டார் என்று கூறிய நீதிபதி, இது குறித்து உள் விசாரணை குழு எப்போது அமைக்கப் போகிறீர்கள் என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஒரு ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரி கண்காணிக்க வேண்டும், வழக்கின் விசாரணை அறிக்கையை டிசம்பர் 22ல் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திருப்பூர் எஸ்.பி., சிருஷ்டி சிங் விசாரிப்பார் என்றும், நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி இந்த விசாரணையை கண்காணிப்பார் என்றும் தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தொடர்ந்து எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவங்கள் வெளிவந்ததும், அருள்விக்னேஷ் இல்லம் முன்பாக தவெக தொண்டர்கள் குழுமினர். வீட்டிற்கு முன்பாக திரண்ட நிர்வாகிகளை சந்திக்க அருள் விக்னேஷ் மறுத்ததால் வீட்டின் வாயில் கேட்டினை அவரது ஆதரவாளர்கள் பூட்டி வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.