சாதி fb
தமிழ்நாடு

சாதியை காரணம் காட்டி மறுக்கப்பட்ட கோயில் நன்கொடை... வேதனை தெரிவித்த நீதிபதி!

சாதியை காரணம் காட்டி கோயில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவம் என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தில் கிராமங்களில் உள்ள கோயில்களில் பட்டியலின மக்கள் செல்ல முடியாத நிலை இன்னும் நீடித்து வருகிறது. விழுப்புரம் மேல்பாதி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் வழிபட வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில், குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்திற்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படுவதாகவும் மற்றவர்களிடமிருந்து சாதியை காரணம் காட்டி நன்கொடை வாங்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து, அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் பாண்டியராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தவழக்கு கடந்த திங்கள்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சர்க்கரவர்த்தியின் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, சாதியை காரணம் காட்டி கோயில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவம் என்றும், தீண்டாமை நாட்டில் பல்வேறு வழிகளில் பின்பற்றப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

மேலும், கடவுள் முன் சாதி இருக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய அவர், சாதிகள் இந்தியாவில் இன்னும் உள்ளன. சாதி தேசத்துக்கு எதிரானது. அப்படிப்பட்ட சாதியிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் என்றும் அம்பேத்கர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.

எனவே, குன்றத்தூறில் உள்ள திருநாகேஸ்வரர் கோயிலுக்கு அனைத்து சமுதாய மக்களிடமிருந்து நடைகொடை பெற வேண்டும் என்ற மனுவை பரிசிலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார் .