சென்னை முகநூல்
தமிழ்நாடு

குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? - எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

காவல் நிலைய கழிவறைகள்: குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் சூழல்? அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள்!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த இப்ராஹிம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஜாகிர் உசேனுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் மகன் கழிப்பிடத்தில் விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும், உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது?’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், ‘கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதற்கு கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், “ காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா? அந்த கழிவறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? அவர்களுக்கு எதுவும் ஆவதில்லையே, ஏன்? இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு நடந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும். மனுதாரரின் மகனுக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளனர்.