செய்தியாளர்: சகாய பிரதீபா
“சீமான் தெரிவித்த கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மதுரை மாவட்டம் அண்ணா நகர் காவல் துறையினர் மனுதாரரின் புகாரை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் நேற்று (09/01/25) செய்தியாளர் சந்திப்பில் தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தந்தை பெரியார் குறித்து அடிப்படை ஆதாரம் இன்றி சீமான் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதால், தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்னைகள் எழுந்துள்ளன.
சீமான் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவே, எனது புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் மீது மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “தந்தை பெரியார் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்கள் உரிமை, பெண்கள் கல்வி, பெண்கள் மேம்பாடு என பெண்களின் முன்னேற்றத்திற்கு பெருமளவில் சேவையாற்றி உள்ளார். அவரைப் பற்றி சீமான் அவதூறாக பேசி வருகிறார். ஆகவே அவர் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, “சீமான் தெரிவித்த கருத்துக்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மதுரை மாவட்டம் அண்ணா நகர் காவல் துறையினர் மனுதாரரின் புகாரை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கவும். அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.