உயர்நீதிமன்றம் pt web
தமிழ்நாடு

“ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி வளர்ச்சிக்கு எதிரானது” - உயர்நீதிமன்ற நீதிபதி

சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் சுப்பையா

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, ஆவல்பட்டி கிராமத்தில் வரதராஜ பெருமாள் மற்றும் சென்ராய பெருமாள் எனும் கோவில்கள் உள்ளன. இங்கு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை அறங்காவலர்களாக நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரிய விண்ணப்பத்தை விசாரிக்க, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிடக் கோரி, ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி பரத சக்கரவர்த்தி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சாதியை நீடித்து நிரந்தரமாக்கச் செய்யும் வகையிலான இந்த கோரிக்கை, அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், சாதி, ஒரு சமூக தீங்கு. சாதியில்லா சமுதாயம்தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு. சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது எனத் தெரிவித்துள்ளார்.

சாதி என்பது கற்றுக் கொண்டதில் இருந்தோ, வாழ்வில் செய்த செயல்களின் அடிப்படையிலோ முடிவு செய்யப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, பிறப்பால் வரும் இது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

சாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்க கூடாது, சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தை வகுத்த தலைவர்களின் கனவாக இருந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

அறங்காவலர் பதவிக்கு, பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மீக, அற சிந்தனை தான் அவசியம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, சாதி அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.