திருமண விழா | மெகந்தி போட்டப்படியே அலுவலக வேலை.. வைரலாகும் வீடியோ - குவியும் எதிர்வினைகள்!
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் ஆகியோர் அவ்வப்போது, அதிக பணி நேரம் குறித்துப் பேசி வருகின்றனர். அதாவது, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் (6 நாட்கள் வேலை) என்பதே அவர்களது வலுவான கோரிக்கையாக உள்ளது. இவர்களுடைய கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் அவ்வப்போது, இந்த கருத்து மீண்டும்மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இவர்களது கருத்தைப் பறைசாற்றும் விதமாக பெண் ஒருவர், மெகந்தி போட்டப்படியே லேப்டாப்பில் பணிபுரியும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண விழா ஒன்றில், பெண் ஒருவர் காலில் மெகந்தி போட்டப்படியே அந்த லேப்டாப்பில் பணிபுரிகிறார். ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றிய எந்த விவரங்களும் தெரியவில்லை. எனினும், இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'glam.omanshi.style' என்ற முகவரியால் பகிரப்பட்டுள்ளது. ஒருவேளை, இது பழைய வீடியோவாக இருந்தாலும் அது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. அதேநேரத்தில் இந்தப் பதிவுக்கு பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
’இந்த பெண்மணி வேண்டுமென்றே, தான் வேலை செய்கிறேன் என்பதை காட்டுவதற்காகவே மெகந்தி நிகழ்வில்கூட வேலை செய்திருக்கிறார்’ எனவும், ஒருநபர் ’ஏன் உங்கள் நிறுவனத்தில் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு கூட விடுமுறை கிடைக்காதா’ எனவும் ’நாராயணமூர்த்தி உங்களைப் போன்ற நபரைத்தான் வேலைக்கு தேடிக் கொண்டிருக்கிறார்’ எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.