மதுரை கைத்தறி நகரில் மதுபானக் கடையை திறக்க தடை விதிக்கக் கோரி மேகலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது.
இது குறித்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு , ” அரசு ஒருபக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அதிகரித்து வருகிறது. நம் வீட்டு குழந்தைகளுக்கு இதுபோன்று செய்வோமா? அரசின் கொள்கைகளே முரணாக உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, டாஸ்மாக் கடை விவகாரத்தில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இன்றைய திரைப்படங்களில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான காட்சிகள் இடம்பெறாமல் இருப்பதில்லை .
அரசு டாஸ்மாக் கடையை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?, அது அரசின் பணி இல்லையே?. மது அருந்துவதை ஊக்குவிக்கவில்லை என்றால், எதற்காக மது விற்பனை செய்ய வேண்டும்? ஒவ்வொரு கட்சிக்காரர்களும் மதுக்கடைகள் மூடப்படும் என குறிப்பிடும் நிலையில் யாரும் அதை செய்வதில்லை .” என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.