செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள கோனூரில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய ஏரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த தொடர் கன மழையினால் ஏரியில் நீர் நிரம்பி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீடுகள் மற்றும் தெருக்கள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் முடங்கி உள்ளனர்.
இதேபோல் வடகரை கிராமத்தில் பழவாறு ஓடையில் ஏற்பட்ட வெள்ளம் கிராமம் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொது மக்கள் பாதுகாப்பாக பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்ணாடம் வடகரை சாலை துண்டிக்கப்பட்டதால் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.