செங்கல்பட்டு: தொடர் மழை எதிரொலி – தண்டவாளத்தை சூழந்த வெள்ளம்... சென்னை செல்லும் ரயில்கள் தாமதம்...
செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று காலை முதலே கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் சுமார் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாம்பாக்கம், பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது.
இதனால் மதுராந்தகத்தில் பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மதுராந்தகம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளம் சுற்றி அதிகப்படியான வெள்ள நீர் செல்வதால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக செல்கின்றன. இந்த பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.