செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை அம்பத்தூர், கொரட்டூர், பாடி, முகப்பேர், நொளம்பூர், மதுரவாயில், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயில், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், மாங்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் மழை பொழிந்து வருகிறது.
மழை காரணமாகவும், அலுவல் நேரம் என்பதாலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் நெற்குன்றம்- மதுரவாயல் இடையே 3 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுரவாயல் ஆலப்பாக்கம் சிக்னலில் வாகனங்கள் சீராக சொல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசலில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் சிக்கித் தவித்தனர். வேலைக்குச் சென்ற பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.