செய்தியாளர் - ராஜ்குமார்.ர
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சில மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்படி எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? எந்தெந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்பதைப் பார்க்கலாம்... தமிழகத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.
அதேபோல், தெற்குக் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது. இந்த வானிலை அமைப்புகளின் காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி , நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மேற்ந்த் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதவிர, தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.