Weather Today |தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி, சென்னையிலும் அதன் புறநகரங்களிலும் நேற்று இரவு மிதமான முதல் கனமழை வரை பெய்தது. பூந்தமல்லி, வடபழனி, வள்ளுவர் கோட்டம், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பாரிவாக்கம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. முக்கிய சாலைகளும் தாழ்வான பகுதிகளும் நீரில் மூழ்க, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், இன்று வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.