சட்டமன்றத்தில் கனிமவளம் விவகாரம் குறித்து நடந்த விவாதத்தில் தவெக மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. முன்னாள் அமைச்சர் ஒருவர் மதுரையில் கனிமவளங்களை கட்டுப்படுத்தியதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்ட, எ.வ.வேலு ஆதாரமின்றி குற்றம் சாட்ட வேண்டாம் என எதிர்த்தார். இரு தரப்பும் கடுமையாக மோத, அவை முழுவதும் பரபரப்பு நிலவியது.
கனிமவளம் தொடர்பாக சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, தவெகமற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.
மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், கனிமவளங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ்அர்ஜுனா குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஆதாரமின்றி குற்றம் சாட்டக்கூடாது என்றும், பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவதே ஆதவ் வேலை என்றும் கூறினார். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்றும், திமுகவினர் நாகரிகமாக பேச வேண்டும் என்றும் கூறினார். கடும் அமளி ஏற்பட்டநிலையில், அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், இருபுறமும் இளம் உறுப்பினர்கள் எல்லை மீறுவதாக கூறினார். அவையில் அனைவரும் கண்ணியத்தை மீறக்கூடாது என்றும், நம்மைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்றும் வேதனை தெரிவித்த அவர், உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய வைத்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.