செய்தியாளர்: நவீன் குமார்
இன்று அரசியல் அமைப்பு தினத்தை ஒட்டி, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி வளாகத்தில் சிம்போசியம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்...
“இந்த தினத்திற்கும், 10ம் ஆண்டு விழாவிற்கும் எனது வாழ்த்துகள். உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா இன்று முன்னணி நாடாக திகழ்கிறது. அதேநேரம், உலகில் இந்தியா பெரிய பொருளாதார நாடாக வேண்டும் என்ற நம் கனவு நிறைவடைய நாம் இன்னும் பயணம் செய்ய வேண்டும்.
இப்போதெல்லாம் செய்தித் தாள்களில் பார்த்தால் சமூக நீதி குறித்த செய்திகள் வருகிறது. ஆனால் குடிநீர் தொட்டியில் ஒரு சமுதாயத்தினர் அருவறுக்கத்தக்க செயல் செய்தனர்.
நிலை இப்படியிருக்க, மொழியினால் ஏற்படும் பிரிவினைவாதம் ஆபத்தானது. சுதந்திரத்திற்கு முன்பு நமது கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் அழித்தார்கள். தற்போது புதிய பாரதம் உருவாகி வருகிறது. ஆனால் இன்னும் சமூக நீதி காக்கப்படாமல் தீண்டாமை உள்ளது. மொழியை வைத்து பிரிவினையில் ஈடுபடுகின்றனர். புதிய இந்தியாவை உருவாக்குவோம். சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு சொந்தமானது இல்லை; அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை.
தீண்டாமை கொடுமை இன்றும் உள்ளது; அது மிகவும் ஆபத்தானது. மொழியினால் ஏற்படும் பிரிவினைவாதம் ஆபத்தானது. இந்த நாள் 2015 வரை சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது, மோடி பதவி ஏற்ற பின் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என பிரிவினை இருந்தது. இருப்பினும் இப்போது அரசியல்வாதிகளால் அது செய்யப்பட்டது. இந்தியா என்பது ஒரே நாடு.
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என்று பேசினார்.