ஆளுநர் ஆர்.என்.ரவி pt desk
தமிழ்நாடு

“அனைவரும் சமம் என்பதை சனாதனம் வலியுறுத்துகிறது” - சைவ சித்தாந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“சனாதனம் என்பது அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. ஆன்மிகத்தை அறிவியல் பூர்வமாக இல்லை என அழிக்க நினைக்கிறார்கள்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஆறாவது சர்வதேச அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகமும் இணைந்து நடந்தும் இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று தொடக்க நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்கலைக்கழக வேந்தர், பாரிவேந்தர் மற்றும் இணை வேந்தர் ப.சத்தியநாராயணன் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், ஆராய்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் சிறப்பு மலரை மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா வெளியிட்டார்.

சனாதன தர்மம் என்பது ஆன்மிகத்தின் அடையாளமாக இருக்கிறது:

இதைத் தொடர்ந்து அந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது... “சைவ சிந்தாந்தம் தமிழுக்கு அடையாளமாக இருக்கிறது. பக்தி நிலை மூலமாகத்தான் சிவனை அடைய முடியும். பக்தியின் மூலம் ஆன்மிகம் காப்பாற்றப்பட்டுள்ளது. சைவ சிந்தாந்தத்தில் சமுதாய வேறுபாடு இல்லை. சனாதன தர்மம் என்பது ஆன்மிகத்தின் அடையாளமாக இருக்கிறது. அதேபோல் சனாதனம் அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்துகிறது.

ஆன்மிகம் என்பதை அறிவியல் பூர்வமாக இல்லை என அழிக்க நினைக்கிறார்கள்:

ஜம்மு, காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை பல்வேறு இடங்களில் சைவ சிந்தாந்தம் பரப்புவது முக்கியமானதாக கடந்த காலத்தில் இருந்தது. மாநில மொழியில் இலக்கியம் வளர்த்தது சைவ சிந்தாந்தம். அதன் மூலம் எளிய மக்களுக்கும் சென்று பயன் பெற்றதது. தற்போது ஆன்மிகம் என்பதை அறிவியல் பூர்வமாக இல்லை என அழிக்க நினைக்கிறார்கள். இதுபோன்ற தருணத்தில் ஆதீனங்கள் நிகழ்வுகளை தொடர்ந்து கொண்டு செல்வது அவசியமானது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சைவ சிந்தாந்த ஆராய்ச்சி படிப்புகளை கொண்டு வர வேண்டும். மூன்று நாட்கள் மிக முக்கியமானது; அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி பேசினார்.