செய்தியாளர்: சுப்ரமணியம்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் இண்டியம்பாளையம் சின்னகரட்டைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (19). இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துகாட்டைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான சக்திவேல் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் புதுக்கொத்துகாட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அரசூர் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள இருவரும், சின்னகரட்டில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி சின்னகரட்டில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து மனைவி தற்கொலை செய்து கொள்வதை பார்த்த சக்திவேல், அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து இருவரும் கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்ட கிராம மக்கள் இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இரு சடலத்தையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.