சேலம் | விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் திருடுபோன வழக்கு - இருவர் கைது
செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு உப்பு ஓடை பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (53). விவசாயியான இவர், தனது தோட்டத்து வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி வீட்டிற்கு வந்தபோது வெளிப்புற பூட்டு உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4.50 லட்சம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து அவர், ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடிவந்தனர்.
அப்போது, ஈரோடு, புளியம்பட்டியைச் சேர்ந்த பாரத்குமார் (37), தர்மபுரி மாவட்டம், அரூர், கம்மாளப்பட்டி கவியரசன் (24), ஆகியோர், இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஏழு பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.