கோபி சுதாகரின் சொசைட்டி பாவங்கள் fb
தமிழ்நாடு

யூடியூப்பில் இருந்து நீக்கப்படும் முன் ஒருமுறை பார்த்துவிடுங்கள்; கோபி சுதாகரின் சொசைட்டி பாவங்கள்

ஊரெல்லாம் ஒரே பேச்சு என்று சொல்லுமளவுக்கு வைரலாகியிருக்கிறது, கோபி சுதாகரின் ‘சொசைட்டி பாவங்கள்’ வீடியோ. "யூடியூப்பில் இருந்து நீக்கப்படும் முன்பு ஒருமுறை பார்த்துவிடுங்கள்" என்ற வேண்டுகோளோடு, தொடர்ந்து பகிரப்படும் அந்த வீடியோ குறித்த தொகுப்பு இது.

PT WEB

தமிழ்கூறும் நல்லுலகம் முழுக்க அறிமுகமானவர்கள் யூடியூப்பர்களான கோபியும், சுதாகரும். இவர்கள் இணைந்து நடத்தும் ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் அறுபத்து இரண்டரை லட்சம். இவர்களது ‘புள்ளிங்கோ பாவங்கள்’, ’டீ- மான் பாவங்கள்’, ’கூட்டணி பாவங்கள்’, ’ தீபாவளி பாவங்கள்’, ’ரிசல்ட் பாவங்கள்’ போன்ற பல வீடியோக்கள் 50 லட்சம் முதல் 1 கோடி பார்வைகளைப் பெற்றவை.

கோபியும், சுதாகரின் சமீபத்தில் வெளியிட்ட ’சொசைட்டி பாவங்கள்’ வீடியோ, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பார்வையையும் ஈர்த்திருப்பதுடன், அதுகுறித்த விவாதங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது. காரணம், சமீபத்தில் நடந்த கவின் ஆணவப் படுகொலையும், சாதி அமைப்புகளின் அலப்பறைகளையும் தொட்டு, மிகத் தீவிரமான கருத்துகளை செம நகைச்சுவையுடன் பேசுகிறது இந்த வீடியோ.

தமிழ்ச் சமூகத்தை, குறிப்பாக கிராமப்புற இளைஞர்களைப் பாழ்படுத்தும் சாதி வெறியர்களை கலாய்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் பிரசார நெடியோ, ஆக்டிவிஸ்ட் மனநிலையையோ வெளிப்படுத்தாமல், சாதி வெறி பேசுவோர் தரப்பிலிருந்தே பேசும் இளைஞர் ஒருவரின் சீர்திருத்த குரலாக வெளிப்பட்டிருப்பதே இதன் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

“ஏன்டா சாதி சாதின்னுக்கிட்டு; படிச்சு உருப்படற வேலையைப் பாருங்கடா” எனும் தொனியில் சமூகத்துக்குத் தேவையான கசப்பு மருந்தை, தேன் குழைத்துக் கொடுத்த விதத்தால் பாராட்டைப் பெற்றிருக்கிறது இந்த வீடியோ. தமிழ்நாட்டை சிரிக்கவைப்பவர்களாக மட்டும் அல்லாமல், கூடவே சிந்திக்கவைப்பவர்களாகப் பயணிக்கும் கலைவாணர், எம்.ஆர்.ராதா மரபில் நம் காலத்தின் கவுண்டமணி - செந்திலாக உருவெடுத்திருக்கிறார்கள் கோபியும் சுதாகரும்!