சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 10ஆயிரத்து 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 22ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் வெறும் உலோகம் மட்டும் அல்ல... இந்தியர்களின் உணர்வோடு கலந்தது. ஒரு குண்டுமணி தங்கமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான இந்தியர்களின் எண்ணம்.
அவசியத் தேவைக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் மட்டுமல்லாமல், ஆடம்பரத்திற்காக வாங்குபவர்களும் அதிர்ச்சி அடையும் வகையில், அதன் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 10ஆயிரத்து 5ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து 80ஆயிரத்து 40ஆக உள்ளது.
இந்த ஆண்டின் முதல் நாளில் தங்கம் ஒரு சவரன் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களில் ஏற்றத்துடனே காணப்பட்ட நிலையில், மார்ச் 4ஆம் தேதி 64 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், ஏப்ரல் 22ஆம் தேதி அப்போதைய உச்சமாக 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மே மாதத்தில் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், ஜூன் 2ஆம் தேதி ஒரு சவரன் 71ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலை, செப்டம்பர் ஒன்றாம் தேதி முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரு சவரன் 77 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்த ஐந்தே நாட்களில் புதிய உச்சத்தை தங்கம் விலை எட்டியுள்ளது. இந்தாண்டு தொடங்கிய 8 மாதங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை 22ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்துள்ளது.