கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துபவரா? மூலநோய் ஆபத்து.. தடுக்க வழிகள் என்ன?
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின்படி, கழிப்பறையில் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூலநோய் அபாயம் 46% அதிகம் என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின்படி, கழிப்பறையில் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூலநோய் அபாயம் 46% அதிகம் என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு 'பிஎல்ஓஎஸ் ஒன்' (PLOS One) என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கழிவறையில் போன் பயன்படுத்தும்போது, மக்கள் வழக்கத்தைவிட அதிக நேரம் அமர்ந்திருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்றவர்களில், போன் பயன்படுத்தாதவர்கள் ஒரு சில நிமிடங்களில் வெளியேறி விடுகின்றனர். ஆனால், போன் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பயனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் செலவிடுகின்றனர். அதிக நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பது, ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது அந்த நரம்புகள் வீக்கமடைந்து மூலநோயாக மாற வழிவகுக்கிறது. இந்த ஆய்வில், மலம் கழிப்பதில் சிரமப்படுவதைவிட, நீண்டநேரம் அமர்ந்திருப்பதே மூலநோய்க்கான முக்கிய காரணியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மயோகிளினிக்கின் கூற்றுப்படி, மூலநோய் என்பது ஆசனவாய் அல்லது மலக்குடலில் உள்ள வீக்கமடைந்த மற்றும் அழற்சியடைந்த நரம்புகளாகும். இது வலி, அரிப்பு, இரத்தக்கசிவு அல்லது வீக்கம் போன்றஅறிகுறிகளை ஏற்படுத்தும். இது ஆபத்தானது இல்லை என்றாலும், அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.
தடுப்பதற்கான வழிகள்:
கழிவறைக்குச் செல்லும்போது ஸ்மார்ட்போனை வெளியே வைப்பதே மூலநோயைத் தடுப்பதற்கான எளிய வழி. கழிவறையில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மலச்சிக்கலைத் தவிர்க்க, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, போதுமான தண்ணீர் அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலநோய் வராமல் தடுக்கஉதவும் என்கின்றனர்.