பாமக தலைமை தொடர்பான உட்கட்சி மோதலில், கட்சியை நிர்வகிக்கும் அதிகாரம் அன்புமணி தரப்புக்கே உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாகச் சாடியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து இதற்கான வேலைகள் தற்போதே வேகம் பிடித்து வருகின்றன. தவிர, இதர கட்சிகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பாமகவும் அதில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தனித்தனியாக நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள், கூட்டங்கள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் அன்புமணி செயல்பட்டார் என அவர் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, அன்புமணியை கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளதாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி பா.ம.க செய்தித் தொடர்பாளர் கே.பாலு தெரிவித்தார்.
"இந்த அங்கீகாரம், 2026 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும்" எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு மறுநாள், தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி கடிதம் ஒன்றை அளித்தார். அதில், 'கட்சியின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களையும் அதில் அவர் இணைத்திருந்தார்.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை தொடர்பான உட்கட்சி மோதலில், கட்சியை நிர்வகிக்கும் அதிகாரம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கே உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI)தெரிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பாமகவின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, ““2022-ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். அதற்கான ஆவணத்தை அவரே தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் 2023-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் அன்புமணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும், அவர் 2026 ஆம் ஆண்டு வரை தலைவராகத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது.
ஆனால், 2023-ல் பொதுக்குழுக் கூட்டம் நடக்கவே இல்லை. அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளது. போலியான பொதுக்குழு நடத்தியது கட்சியையே திருடியதற்கு ஒப்பானது. அன்புமணி தலைவர் இல்லை என்று நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. மாறாக, அன்புமணி தரப்பு கொடுத்த போலியான ஆவணத்தின் அடிப்படையில் அவருக்கே அதிகாரம் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் அன்புமணியுடன் சேர்ந்து அவருக்குச் சாதகமாக நடந்திருக்கிறது. இது மிகப் பெரிய மோசடி ஆகும். தேர்தல் ஆணையம் செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை. இந்த மோசடியைக் கண்டித்து, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம் நடத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.