பாமக|அலுவலக முகவரி மாற்றம்; ”25 ஆண்டுகள் தலைவராக இருந்த ஜி.கே.மணிக்கு அழகல்ல” வழக்கறிஞர் கே. பாலு!
பாமகவில் கடந்த சில மாதங்களாகவே தந்தை - மகன் இடையேயான பிளவு, தொடர் விவாதங்களை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே, தனித்தனியாக நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல்போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. இத்தகைய சூழலில், அன்புமணி தரப்பு நடத்திய கட்சி பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீண்டும் பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் அன்புமணி செயல்பட்டார் என அவர் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தவிர, இக்கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குழுவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி ராமதாஸ் பதில் சொல்லாததால் அவரை கட்சியிலிருந்து நீக்கினார் ராமதாஸ்.
அதேநேரத்தில், அன்புமணியின் நீக்கத்திற்குப் பதிலளித்த வழக்கறிஞர் கே. பாலு, ''பாமகவில் நிறுவனருக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் என்பது வழங்கப்படவில்லை. பதவி நீக்கம் செய்வது, கூட்டங்கள் நடத்துவது என எந்த முடிவாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியினுடைய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. எனவே, இன்றைக்கு ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது. பாட்டாளி மக்கள் கட்சியை எந்த விதத்திலும் ராமதாஸின் அறிவிப்பு கட்டுப்படுத்தாது. கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்ந்து வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மனத்தை தேர்தல் ஆணையத்திற்கு அளித்தோம்.
அன்புமணி ராமதாஸ் தலைவராக தொடர்வதை அங்கீகரித்து தேர்தல் ஆணையத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. எனவே, 2026 ஆகஸ்ட் 1 வரை அன்புமணி ராமதாஸ் அவர்களே பாமக-வின் தலைவராக தொடர்வார். தொடர்ந்து, இந்த கடிதத்தின் மூலம் பாமகவில் இரு அணிகள் என்ற குழப்பம் தீர்கிறது. அன்புமணி தலைமையில் ஓர் அணி மட்டுமே பாமகவில் உள்ளது என்பது தெளிவாகிறது" எனத் தெரிவித்தார். தொடர்ந்து, பா.ம.க.வின் தலைமை அலுவலகமாக சென்னை தியாகராய நகரில் உள்ள திலக் தெருவில் உள்ள முகவரியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
வழக்கறிஞர் கே. பாலு அளித்த இந்தப் பேட்டி பாமக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு விளக்களிமளித்து, பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், " அரசியலை திசை திருப்பவும் மக்களை நம்ப வைக்கவும் தேர்தல் ஆணையத்தின் கடிதம் காட்டப்படுகிறது. அந்த கடித்ததில் திலக் தெரு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாமகவின் நிரந்தரமான முகவரி 63, நாட்டு முத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை என்பதுதான். இதனை தி நகர், திலக் தெருவிற்கு மாற்றியது மோசடி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஜிகே மணி-யின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள வழக்கறிஞர் கே. பாலு , “அன்புமணி எப்பொழுது கட்சித் தலைவராக பொறுப்பேற்றாரோ அப்பொழுதே கட்சி அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்து தியாகராய நகருக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த அலுவலகம் மாற்றப்பட்டது ராமதாசுக்கும் தெரியும். குறிப்பாக தேனாம்பேட்டை அலுவலகத்திற்கு கட்சியினர் வந்து செல்வதற்கு பெரும் சிரமமாக இருந்தது. அங்கு வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை. ஆகவேதான் கட்சி அலுவலகம் தியாகராய நகருக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், நேற்றுதான் தெரியும் என்று கூறுவது 25 ஆண்டுகள் கட்சியில் தலைவர் பதவியில் இருந்த ஜி.கே.மணிக்கு அழகல்ல" எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த தேர்தல் ஆணைய கடிதம் குறித்து அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவரும் இன்னும் பேசாத நிலையில், அவர்களின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.