sivasankar - gk mani - anbumani web
தமிழ்நாடு

பாஜக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறுமா?.. அமைச்சர் சிவசங்கர் விமர்சனத்திற்கு ஜிகேமணி பதில்!

பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா என்றும், மூத்த தலைவர்கள் இருக்கும்போது அன்புமணி ராமதாஸ் தலைவரானது எப்படி என்றும் அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியிருந்தார்.

PT WEB

பாட்டாளி மக்கள் கட்சியில் மூத்தவர்கள் இருக்கும்போது அன்புமணி தலைவரானது எப்படி என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் சிவசங்கர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவை நிபந்தனை இன்றி ஆதரிக்கத் தயார் எனக்கூறும் அன்புமணி, இட ஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவாரா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பாமக தங்கள் அரசியல் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்து வருவதாகவும் சிவசங்கர் விமர்சித்தார். அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய பாஜக அரசை வலியுறுத்த பாமகவால் முடியுமா என்றும் அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவசங்கர் கேள்விகளுக்கு ஜிகே மணி, அன்புமணி பதில்..

சிவசங்கர் வைத்த விமர்சனத்திற்கு பதிலளித்திருக்கும் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, நாளையே பாஜக கூட்டணியிலிருந்து பாமக வெளியே வரத் தயார், திமுகவுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயார். அப்படி செய்தால், வரும் பேரவை கூட்டத்திலேயே 15% இட ஒதுக்கீடு சட்டத்தை திமுக நிறைவேற்றுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பாமகவின் தெளிவான கேள்விகளை புரிந்துகொள்ளாமல் சிவசங்கர் விமர்சிக்கிறார். சமூக நீதி குறித்து எவ்வளவு பாடம் நடத்தினாலும் திமுகவுக்கும், அதன் தலைமைக்கும் புரிவதில்லை. சிவசங்கர் முகவரியில்லாமல் இருந்தபோதே, சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என பாமக வலியுறுத்தியது என்று கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கூறுகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வருக்கு பயம், வன்னியர் உள் ஒதுக்கீட்டை சட்டமன்ற கூட்டத்தில் கொண்டுவந்தால் தேர்தலில் ஆதரவளிக்க தயார் என்று கூறினார். மேலும் இன்றும் சமூக நீதிக்காக போராடுகிறோம் என்றால், சமூக நீதி கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம் என திமுகவை விமர்சித்துள்ளார்.