Karthi Chidambaram
Karthi Chidambaram pt desk
தமிழ்நாடு

“தமிழ்நாட்டின் இந்த 2 கோயில்கள்தான் பாஜகவின் அடுத்த குறி” - பரப்புரையில் கார்த்தி சிதம்பரம் பேச்சு!

Kaleel Rahman

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அந்த தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர்...

ramar temple

ராமர் கோயில் அரசாங்க கோவில் அல்ல. அது தனியார் டிரஸ்ட்க்குச் சொந்தமானது:

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை அரசாங்கம் கட்டவில்லை. அதை ஒரு தனியார் டிரஸ்ட் மூலமாக கட்டியிருக்காங்க. நம்ம ஊரில் இருப்பது போல் அது அரசாங்க கோயில் இல்லை. ராமர் கோயிலை கட்டியுள்ள டிரஸ்ட்டியிடம் 3 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கு. அதேபோல அந்த டிரஸ்ட்க்கு வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கலாம். அப்படி வாங்கும் பணத்திற்கு வரி கிடையாது என்று சொன்னதால் அதன் மூலம் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரப்போகுது. இதுக்கு அமெரிக்கா லண்டன்ல இருக்குற எல்லா மார்வாடி, சேட்டும் பணம் அனுப்புவார்கள். அதன் மூலமா 11 ஆயிரம் கோடி ரூபாய் அந்த டிரஸ்ட்ல இருக்கும்.

ராமேஸ்வரம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை அபகரித்து விடுவார்கள்:

மீண்டும் அவங்க ஆட்சிக்கு வந்த பிறகு, மற்ற மாநிலங்களில் உள்ள அந்த கோவிலுக்குச் சம்பந்தப்பட்ட பெரிய கோயில்கள் எல்லாத்தையும் அந்த டிரஸ்ட்குள்ள கொண்டுபோகப் போறாங்க. இதுல ஒன்னு ராமேஸ்வரத்துல இருக்குற கோயில் இன்னொன்னு மதுரை மீனாட்சியம்மன் கோயில். இந்த ரெண்டு கோயிலையும் இங்கிருந்து எடுத்து அங்கே இருக்குற டிரஸ்ட்குள்ள கொண்டுபோயி சேக்கலாம்னு பாக்குறாங்க. அந்த டிரஸ்ட்டுல சேத்ததுக்கு அப்புறம், இந்த கோயிலை எப்படி நடத்துறது என்பதை அந்த டிரஸ்ட் முடிவு செய்யும்னு சொல்லுவாங்க. அதுக்கப்புறம் என்ன முறையில வழிபாடு நடத்த வேண்டும் என்பதை அந்த டிரஸ்ட் முடிவு செய்யும்னு சொல்லுவாங்க. அதன்பிறகு யார் கோயிலுக்குள்ள வரணும். யார் கோயிலுக்குள்ள வரக் கூடாதுன்னு சொல்லுவாங்க.

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மீண்டும் மனுசாஸ்திரப்படி என்னென்ன நடந்ததோ அந்த நிலைக்கு தள்ளப்படுவோம்:

அண்ணல் அம்பேத்கர், காந்தியடிகள், பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் போராட்டமெல்லாம் வீணாகப் போய்விடும். அதன்பிறகு கோயிலை சுற்றி யார் கடை வைத்துக்கொள்ளலாம் என்பதை முடிவு பண்ணுவாங்க. இவங்கதான் இங்க கடை வைக்கலாம் புலால் உண்பவர்கள் கடை வைக்கக் கூடாது என்று நிர்ணயம் பண்ணுவாங்க. அதன் பிறகு முக்கியமா கோவிலைச் சுற்றி யார் குடியிருக்கலாம் என்பதை முடிவு பண்ணுவாங்க. இது எப்படீன்னா, மீண்டும் மனுசாஸ்திரப்படி என்னென்ன நடந்ததோ அந்த நிலைக்கு தள்ளப்படுவோமே தவிர, இங்கு நடந்த சமுதாய நீதியெல்லாம் பின்னுக்குத் தள்ளப்படும். இதையெல்லாம் நீங்கள் கவனிக்காத அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா அவங்க செஞ்சிருவாங்க.

மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், சமுதாயத்திற்கு பெரிய பாதிப்பு வந்துவிடும்:

நீங்க நெனைக்கிற மாதிரியெல்லாம் இவங்க இல்ல. நமது கற்பனையை தாண்டி அவர்களுடைய மனதில் ஓடுகின்ற சிந்தனை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும். 75 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்குற சுயமரியாதை, சமூகநீதி உள்ளிட்ட எல்லாமே பின்னுக்குத் தள்ளப்படும்.

அதனால இந்த தேர்தல்ல வேட்பாளரை மட்டும் தேர்ந்தெடுக்குறோம்னு தயவு செய்து நினைத்து விடாதீங்க. நம்முடைய அரசியல் சாசனம், நம்முடைய வாழ்க்கை முறை எல்லாமே இந்த தேர்தல்ல அடங்கியிருக்கு. இதுல நீங்க கவனமா இல்லாம மீண்டும் அவர்கள ஆட்சியில அமர்த்தினால், சமுதாயத்திற்கு பெரிய பாதிப்பு வந்துவிடும். அதை தடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி பேசினார்.