கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் pt
தமிழ்நாடு

கரூர் துயரம் | சட்டப்பேரவையில் கடும் அமளி.. யார் என்ன பேசினார்கள்? நடந்தது என்ன? முழு விவரம்!

கரூர் துயரச்சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் நடந்தது என்ன, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து கட்சி தலைவர்கள் பேசியது என்ன முழுமையான விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளலாம்..

Rishan Vengai

கரூர் துயரச்சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் நடந்தது என்ன, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து கட்சி தலைவர்கள் பேசியது என்ன முழுமையான விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளலாம்..

கரூரில் தவெக பரப்புரை கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேர்மையான மற்றும் உண்மையான வழக்கு விசாரணையை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டும், அதனை கண்காணிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்க்குழுவை நியமித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

தவெக தலைவர் பரப்புரை

இந்தசூழலில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், தமிழக முதலவர் ஸ்டாலின் கரூர் விசயத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க பேரவையில் விவாதம் சூடுபிடித்தது. பின்னர் திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நடந்த விவாதம் என்ன? யார் என்ன பேசினார்கள் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..

சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலின் – 12 மணிக்கு தவெக தலைவர் வருவார் என அக்கட்சியினர் தெரிவித்த நிலையில், இரவு 7 மணிக்கு தான் வந்தார். இந்த கால தாமதம் தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகளை கூட தவெகவினர் செய்து தரவில்லை. காவல்துறையினர் அறிவுறுத்தலை மீறியும் தவெகவினர் செயல்பட்டனர்.

கரூர் துயரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டது. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நடத்துவோர் அதற்குரிய நெறிமுறைகளைக்கு உட்பட்டு நடத்த வேண்டும். கட்டுப்பாடுகளை மீறும்போது பாதிக்கப்படுவோர் தொண்டர்கள் தான் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

தவெக தலைவர் விஜய் - முதல்வர் ஸ்டாலின்

பேரவைத் தலைவர் அப்பாவு - வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால், நீதிமன்றம் குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சித் தலைவர் தவிர்க்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி – இந்த சட்டமன்றத்தில் எல்லாமே தலைகீழாக நடக்கிறது. நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதிலளிக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் – கரூர் துயர சம்பவம் தொடர்பான விளக்கத்தை சட்டமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் பேசினேன். உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

இபிஎஸ் அடுக்கிய கேள்விகள்..

எடப்பாடி பழனிசாமி – தவெக தலைவர் ஏற்கனவே 4 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தியுள்ளார். அவருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பதை காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் நன்றாக தெரியும். அதன்படி முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்.

முதலமைச்சர் பேசும் போது 606 காவலர்கள் பணியில் இருந்ததாக கூறினார். ஆனால் காவல் உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கும் போது 500 பேர் தான் இருந்ததாக கூறினார்கள்.

அதிமுக கூட்டம் நடத்த ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. தவெக பரப்புரை பயணத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது

வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறை, தவெக கூட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

முதல்வர் ஸ்டாலின் – ஊரில் கல்யாணம் என்றால் மார்பில் சந்தனம் என்பது போல எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். கூட்டணிக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இப்படி பேசுகிறார்கள்.

அமைச்சர் ரகுபதி – தவெக தலைவர் பங்கேற்ற நாமக்கல், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் மயக்கமடைந்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி – உங்கள் அரசாங்கம், உங்களின் காவல்துறை, முதலமைச்சர் தான் காவல்துறைக்கு அமைச்சர். அப்படி இருக்கும் போது எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு தவெகவினருக்கு அனுமதி வழங்கியது எப்படி? இது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கரூரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களுக்கு ஒரே இரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அங்கு இரண்டு மேஜைகள் தான் இருந்துள்ளன.

மருத்துவ அமைச்சர் – கரூர் துயரம் தொடர்பாக மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். மொத்தம் 25 மருத்துவர்கள் உடற்கூராய்வில் ஈடுபடுத்தப்பட்டு, அதிகாலை 1.45 மணிக்கு தொடங்கிய பணி அடுத்தநாள் 4 மணிக்கு தான் நிறைவடைந்தது.

அமைச்சர் எ வ வேலு – சம்பவம் நடைபெற்ற இதே இடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் கூட்டம் கூடியது. அப்போது எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. உங்களை மாதிரியே அவரும் ஏற்பாடு செய்திருந்தால் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றிருக்காது.

காரசார விவாதம்..

எடப்பாடி பழனிசாமி – கூட்டம் கூடிய கதையெல்லாம் நான் கேட்கவில்லை. நான் கேட்டது உயிரிழந்தவர்களை பற்றி. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கூட திமுக மாவட்ட மருத்துவ அணி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள் யார் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது?

தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சி கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததாக வரலாறு எங்கும் நடைபெறவில்லை. ஒரு நபர் ஆணையம் அமைத்த நிலையில், அவருக்கு வீடு வழங்கவில்லை, அலுவலகம் வழங்கவில்லை, உதவியாளர் கூட இல்லாமல் ஆணைய தலைவர் உடனடியாக கரூர் செல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வேண்டியது முதலமைச்சரின் கடமை.

துரைமுருகன் – சம்பவம் நடைபெற்ற இரவு ஒரு நொடி கூட தூங்காமல் நேரடியாக கரூருக்கு சென்று வந்த முதலமைச்சரை நீங்கள் அனைவரும் பாராட்ட வேண்டாமா?

முதல்வர் ஸ்டாலின் – என்னுடைய கடமைக்காக தான் நான் கரூர் சென்றேன். ஆனால் தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தின் போது அப்போதைய முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொன்னார் என்பதை சொல்லட்டுமா?

எடப்பாடி பழனிசாமி – கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்து போனார்களே. அப்போது கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன் ?

முதல்வர் ஸ்டாலின் – கள்ளக்குறிச்சியில் பெரும்பாலான அமைச்சர்கள் சென்றனர். அங்கு நடைபெற்றது கள்ளச்சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பு. ஆனால் இங்கு நடைபெற்றிருப்பது அப்பாவி மக்கள் மிதிபட்டு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு.

மெகா கூட்டணி என்றாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்..

எடப்பாடி பழனிசாமி – ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர், காவல் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்படி இருக்கும் போது விசாரணை எப்படி நியாயமாக நடைபெறும்?

கிட்னி முறைகேடு கண்டறியப்பட்டது. நீதிமன்றமே சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. அப்போது இந்த அவசரத்தை தமிழக அரசு காட்டாதது ஏன்? கரூரில் கூட்டம் நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் தான் நிலவுகிறது. அரசின் அலட்சியம் தான் 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்பதை பதிவு செய்கிறேன்.

கே என் நேரு – கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சம்பவம் நடைபெற்ற பிறகு ஒருவர் கூட அங்கு வரவில்லை. அதைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே ? அதில் என்ன உள்நோக்கம் உள்ளது?

அமைச்சர் சிவசங்கர் – கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் தான் பதில் கூற வேண்டும் என்கின்றனர். ஆனால் பட்டப்பகலிலே வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு தூத்துக்குடியில் போராடியவர்களின் நெஞ்சில் சுட்டார்களே அதற்கு அப்போதைய முதலமைச்சர் பதில் கூறினாரா?

அமைச்சர் சிவசங்கரின் பேச்சை நீக்கக் கோரி அதிமுக எம் எல் ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் ஸ்டாலின்– அதிமுகவினர் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டே வந்துள்ளனர். அவர்களின் கட்சியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இந்த அளவிற்கு குரல் வந்திருக்குமா என தெரியவில்லை, மகா கூட்டணி மெகா கூட்டணி என சொல்கிறார்கள் எப்படி கூட்டணி அமைந்தாலும் அதற்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.