2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வி.எஸ். பாபுவின் மறைவுக்குப் பிறகு, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, தவெக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி உருவாகும் நிலையில், வேட்பாளர்கள் குறித்து கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
செய்தியாளர் - M.மீரா
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட வி. எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்றார். மாரடைப்பு காரணமாக வி.எஸ். பாபு நவம்பர் 19, 2026 அன்று காலமானார்.
இதன் காரணமாக கொளத்தூர் தொகுதி தற்போது காலியாக உள்ளதால், அங்கு வேட்பாளர்களாக களமிறங்கபோவது யார், யார் என கேள்வி எழுந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் அடுத்தாண்டு ஜனவரி அல்லது மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் முக்கிய முகமாக விளங்கிய பாபுவின் இழப்பு தவெக-விற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளதால், அங்கு மீண்டும் ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த அக்கட்சி ஆலோசித்து வருகிறது.
இதில் தவெக சார்பில், மறைந்த வி.எஸ். பாபுவின் மகன் சதீஷ் வேட்பாளராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம், திமுகவின் கோட்டையாக இருந்த இத்தொகுதியை மீண்டும் கைப்பற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது . திமுக சார்பில் மீண்டும் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவாரா அல்லது வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் பகுதி செயலர்கள் நாகராஜன், ஐ.சி.எப். முரளி மற்றும் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் ஆகியோரின் பெயர்கள், தலைமையின் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.
அதிமுக சார்பில் ஏற்கனெவே போட்டியிட்ட சந்தானகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதால், கொளத்தூரில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது.