\
விஜய், எடப்பாடி பழனிசாமி
விஜய், எடப்பாடி பழனிசாமிPt web

"41 எம்.எல்.ஏக்கள் மட்டுமே.... ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறோமா?" - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் உள்ள இரண்டு கோடித் தொண்டர்களில் வேலுமணியும் ஒருவர்; அவருடைய தனிப்பட்ட கருத்தையெல்லாம் ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
Published on: 

அதிமுகவில் உள்ள இரண்டு கோடித் தொண்டர்களில் வேலுமணியும் ஒருவர்; அவருடைய தனிப்பட்ட கருத்தையெல்லாம் ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், காவிரி நீர் விவகாரம் மற்றும் மின் கொள்முதல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மற்ற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலை மாறி, தற்போது தமிழகத்திலேயே மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்குக் கடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவோம் என டிஜிபி அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளே, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் (DRI) சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் தவறிவிட்டன. போதை ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டும், தமிழக அரசு வெளிப்படையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், மாவட்ட ஆட்சித் தலைவருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பும் நிலை உள்ளது. ராணிப்பேட்டையில் அமைச்சர் ஒருவர் நள்ளிரவில் காவல் நிலையத்திற்குச் சென்று பெண் காவலர்களின் செல்போன்களைப் பறித்து ஆய்வு செய்ததும், ஈரோட்டில் மற்றொரு அமைச்சர் நள்ளிரவில் கோப்புகளை எடுத்து வருமாறு பெண் எஸ்.பி-யை அழைத்ததும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம். லாட்டரி, ஜாக்பாட் அடித்தது போல் ஆட்சிக்கு வந்துவிட்ட இவர்களுக்கு நிர்வாகம் நடத்தத் தெரியவில்லை; முதலமைச்சர் எதற்கும் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, மேகதாது விவகாரத்தில் மௌனம், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் தொழிற்சாலைகள் என மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். எங்களிடம் 41 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர்; நாங்கள் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை, நிர்வாகச் சீர்கேட்டால் இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்" எனத் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாகக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் உள்ள இரண்டு கோடித் தொண்டர்களில் வேலுமணியும் ஒருவர்; அவருடைய தனிப்பட்ட கருத்தையெல்லாம் ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தனிக்கட்சி தொடங்கி பல தேர்தல்களைச் சந்தித்துவிட்ட நிலையில், அவர்களை மீண்டும் இணைப்பது குறித்து ஊடகங்கள் திட்டமிட்டுக் கேள்வி எழுப்புவதாகவும், திமுகவில் இருந்து பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கிய வைகோவை மீண்டும் இணைப்பீர்களா என யாரும் கேட்பதில்லையே என்றும் அவர் காட்டமாகப் பதிலளித்தார்.