EX MLA கருப்புசாமி
EX MLA கருப்புசாமி  PT WEB
தமிழ்நாடு

”பாஜகவில் இணைந்துவிட்டேனா? போஸ்டரை பார்த்துதான் எனக்கே தெரியும்” - வீடியோ வெளியிட்ட அதிமுக EX MLA!

விமல் ராஜ்

நாடாளுமன்றத் தேர்தல், வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் காட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்குவது என்பது தொடர்பாகத் தீவிர பேச்சுவார்த்தையை இரு கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்,மத்திய அமைச்சர்களான எல். முருகன் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில், திமுக, அதிமுக,காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என 18க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

அதில் குறிப்பாக, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள், கரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.வடிவேல் , கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரைசாமி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ் கந்தசாமி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. ரத்தினம், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் சின்ன சாமி , வலங்கைமான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோமதி சீனிவாசன் , தேனி சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர் ஜெயராமன், அவினாசி சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி , வேடஞ்சத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எம் வாசன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் பி எஸ் அருள், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ராஜேந்திரன், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் செல்வி முருகேசன், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ரோகிணி, சேலம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இ வெங்கடாசலம், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ஆகிய முன்னால் உறுப்பினர்களும், இவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் தங்கராஜு, தேமுதிகவைச் சேர்ந்த திட்டக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே தமிழகம் மற்றும் சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வி.குழந்தை வேலு உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த செய்தி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நபர்களை அழைத்து விளம்பரம் தேடுவதற்காக பாஜகவினர் செய்ததாக அதிமுக ஆதரவாளர்கள் பாஜகவை விமர்சித்து வந்தனர்.

இதற்கிடையில், பாஜக ஆதரவாளர்கள் சார்பில் பகிரப்பட்ட போஸ்டில், "தலைவர் அண்ணாமலை தட்டித் தூக்கிய முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவரம்" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தனர். அந்த போஸ்ட்டில் திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமியின் பெயர் இருந்துள்ளது.

இந்த போஸ்டரை பார்த்து அதிர்ச்சியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ கருப்புசாமி, சில மணி நேரத்தில் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "நான் என்றென்றும் அ.தி.மு.க-காரன்" எனக் குறிப்பிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ கருப்புசாமி, வெளியிட்டுள்ள வீடியோவில், "எம். ஜி. ஆரின் வழிகாட்டுதல்களாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்களாலும், 2011 ஆம் ஆண்டு அவினாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். புரட்சித் தலைவர் அம்மா அவர்களுக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலின் படி நான் தொடர்ந்து கழக பணிகளைச் செய்து வருகிறேன். நான் பாஜகவில் இணைந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நான் பாஜகவில் இணையவில்லை. என்னுடைய உயிர் உள்ளவரைத் தொடர்ந்து அதிமுகவில் தான் இருப்பேன். இந்த இயக்கத்தை விட்டு வேறு இயக்கத்திற்குச் செல்ல மாட்டேன்" என்றார்.

- இரா. விமல்ராஜ்