செய்தியாளர்: சுப்ரமணியம்
அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். ”இந்த விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாத நிலையில், எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை” என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இந்த பிரச்னை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே அந்தியூர் தொகுதியைச் சேர்ந்த ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையனை காண அவரது இல்லத்தின் முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்துப் பேசிய செங்கோட்டையன், “அந்தியூர் பகுதியில் நடைபெற இருக்கும் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக் கூட்டத்திற்கு அழைப்புகள் வழங்க அ.தி.மு.க நிர்வாகிகள் வந்துள்ளனர். ஆலோசனைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. தினமும் அதிமுக நிர்வாகிகள் தன்னை சந்திக்க வருவதாகவும் இது வழக்கமாக நடைபெறும் ஒன்று” என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் லக்கம்பட்டி பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இந்த பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். தொடர்ந்து இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “நான் செல்கின்ற பாதை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்த பாதை. அந்த தெய்வங்கள் இரண்டு பேரும்தான் எனக்கு வழிகாட்டிகள். விவசாயிகள் பாராட்டு விழாவிற்கு அழைத்தார்கள். அதில் எம்.ஜி.ஆர் படமும் ஜெயலலிதா படம் இல்லை என்றுதான் நான் கூறினேன். இதனால் நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நான் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. அவர்கள் படம் இல்லாததால் நான் கலந்துகொள்ளவில்லை.
ஏனென்றால், அவர்கள் என்னை வாழ வைத்தவர்கள். பல்வேறு தியாகங்களை செய்த தலைவர்கள். நேர்மையான பாதையில் எத்தனையோ பேர் ஏதேதோ சொல்கின்றனர். சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கட்டும். எனக்கு எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னைச் சோதிக்காதீர்கள் அதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கின்றேன். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.