சிவி சண்முகம்
சிவி சண்முகம் pt web
தமிழ்நாடு

"நாம போட்ட பிச்சை.. பாஜகவுக்கு 4 MLA.." - விழுப்புரம் கூட்டத்தில் சிவி சண்முகம்

Angeshwar G

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் அறிமுக கூட்டம், விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

சிவி சண்முகம்

வேட்பாளரை அறிமுகப்படுத்தி கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், “மாநிலத்தைப் பற்றி கவலைப்படாதது திமுக அரசு, மக்களைப் பற்றி கவலைப்படாதது பாஜக அரசு. மதத்தின் பெயரால் நாட்டில் பிரிவினைவாதத்தை உருவாக்கி வருகின்றது பாஜக. ஆகவே, நாடு இன்று அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ‘மீண்டும் மோடி, மீண்டும் மோடி’ என்கிறார் அண்ணாமலை. நாங்கள் சொல்வது என்னவெனில், ‘வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி’ என்பதுதான்.

இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால், அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. இப்போதே யாரும் எந்த தொழிலும் செய்ய முடியாது. பாஜகவிற்கு எதிர்ப்பு என தெரிந்தால் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனை செய்வார்கள். இவைகள்தான் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள்.

பாஜக இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிற்கே வரவில்லை. நம்முடைய தயவால், நாம் போட்ட பிச்சை நாலு எம்.எல்.ஏ.... ஆனால், அனைத்து நிறுவனங்களும் அச்சுறுத்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இங்கு விழுப்புரத்தில் கூட என்ன ஆகிற்று. அண்ணாமலை வருகிறார் என கூறி, ஒரு கடையையாவது நடத்த விட்டார்களா? எல்லோரிடத்திலும் வசூல் செய்தனர். இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். அதிமுகவின் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நாம் நிற்கிறோம்” என தெரிவித்துள்ளார்.