ரமணன் pt web
தமிழ்நாடு

”கண்டிப்பா இங்கெல்லாம் மழை இருக்கும்” - வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கொடுத்த அப்டேட்!

சென்னை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் புயல் எச்சரிக்கை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் ஃபெஞ்சல் புயல் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக உரையாடினார்.

PT WEB

- செய்தியாளர் ஐஸ்வர்யா

சென்னை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் புயல் எச்சரிக்கை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் ஃபெஞ்சல் புயல் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக உரையாடினார்.

நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும்

அவர் கூறுகையில், “இலங்கைக்கு தெற்கே தாழ்வு பகுதியாக உருவானது. அப்போது தொடர்ந்து மழை இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு இல்லை. அதற்குப் பின் வடக்கு நோக்கி நகர்ந்தது. அதன் பின் புயலாக மாறியுள்ளதால், கரையை நோக்கி வரும்.

கணினி சார்ந்த கணிப்புகள் ஒவ்வொரு இடத்தைச் சொல்லும். ஒவ்வொரு வானிலை ஆய்வு மையத்தின் கூடத்திலும் எங்கு அதிகமான மாறுபாடு உள்ளது என்பதைப் பார்ப்பார்கள். எங்கு அதிகமான மாறுபாடுகள் உள்ளதோ அங்கு கரையை கடக்கும் என்பது தெரியவரும். அதன் மூலம் வானிலை மையம் மணிக்கு ஒருமுறை மாறுபாட்டினை அறிவிக்கும். நாமும் எங்கு புயல் கரையைக் கடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கண்டிப்பாக வட கடலோர மாவட்டங்களில் முதலில் மழை கொடுக்கும். அரபு கடலோரம் நோக்கி செல்வதால் உள் மாவட்டங்களில் மழை வர வாய்ப்புண்டு. டெல்டா மாவட்டங்களில் மழை கண்டிப்பாக இருக்கும். உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். அரபு கடலை அடைந்தாலும் வட மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கலாம். பொதுவாக மிக கன மழை என்பது படிப்படியாக குறையும். கரையை கடந்து 2-3 நாட்கள் பயணிக்கும், அது வரை கவனமாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.