சாந்தன்
சாந்தன் PT WEB
தமிழ்நாடு

32 ஆண்டுகால சிறை வாழ்க்கை முதல் இறுதிபயணம் வரை.. மகனை ஒருமுறையாவது பார்க்கத் துடித்த தாய்!

விமல் ராஜ்

கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் கண்ணீர் கடலில் மூழ்கியது. அதில் இருந்து இந்தியர்கள் மீண்டு வரவே வருடங்கள் பல ஓடின.

இந்த வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 26 நபர்களைக் கடந்த 1991 ஆம் ஆண்டு கைது செய்தது காவல்துறை. கைது செய்யப்பட்ட 26 நபர்களுக்கும், 1998 ஆம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி தூக்குத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது சிறப்பு நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி

தொடர்ந்து சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் தொடர்புடைய ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மீதம் இருந்த 19 நபர்களையும் தண்டனை காலம் முடிவடைந்ததாகக் கூறி விடுதலை செய்தது நீதிமன்றம்.

இதனையடுத்து அக்டோபர் 8ம் தேதி 1999 ஆம் ஆண்டு, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோர் தங்களுடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

சாந்தன் சிறைக்கு சென்ற அந்த நாள்... நடந்தது இதுதான்!

இந்நிலையில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சாந்தன், கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்குக் கடிதம் ஒன்றை எழுதினார். "நான் ராஜீவ்காந்தியை கொலைசெய்யும் திட்டத்தோடு இந்தியாவிற்கு வரவில்லை. ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் நோக்கத்தில்தான், தமிழகம் வந்தேன். அந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் பலரும் கொழும்பு வழியாகச் செல்லாமல் இந்தியா வந்துதான் வெளிநாடு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படித்தான் நானும் வந்தேன். இலங்கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என அதிகாரிகளால் சான்று அளிக்கப்பட்ட பிறகுதான் இந்தியா வந்தேன்.

சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரைக் கொல்ல வரும் யாராவது தன்னை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ்போர்ட்டை கொண்டு வருவார்களா?” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 1991 ஜூலை 22ம் தேதி கைது செய்யப்பட்ட சாந்தன் 2022-ல் ஏறக்குறைய 32 ஆண்டுக் காலம் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாம்

கடந்த 2022 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்11 ஆம் தேதி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட சாந்தன், இலங்கைத் தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டார். முகாமில் இருந்தபோது அவருடைய புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில் சாந்தன் தனது சொந்த நாடான இலங்கைக்கு தன்னை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தன்னுடைய இறுதிக் காலத்தை அம்மாவுடன் கழிக்க விரும்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

"என் மகனுக்காக வாங்கி வைத்த அனைத்தும் வீணாகி விட்டது" - சாந்தனின் தாய்!

மேலும் கடந்த 33 ஆண்டுகளாக தன்னுடைய மகனைக் பார்க்க முடியாமல் பரிதவித்து வந்த சாந்தனின் தாய், “77 வயது நிரம்பிய முதுமை நிலையில் இருக்கிறேன் நான். ஒரு முறையாவது எனது மகனை நேரில் காண வேண்டும் நான். அவரை இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

ஒருமுறை செய்தியாளர்களின் சந்திப்பின் போது தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்து பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துப் பேசியிருந்த சாந்தனின் தாய், “எனக்கு ஏற்கனவே உடல்நிலை மோசமாக இருக்கிறது. கண் பார்வை இழப்பதற்கு முன்பே மகனைப் பார்க்க வேண்டும். எனது பிள்ளைக்குச் சமைத்துக் கொடுத்து, அவர் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டும்” என ஏக்கத்துடன் பேசியிருந்தார்.

சாந்தனின் தாய்

மேலும் “என் மகன் வீட்டுக்கு வருவார் என அவருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டிய சமையல் பொருட்களை எல்லாம் ஆசை ஆசையாக வைத்திருந்தேன். அவை அனைத்தும் பயன்படுத்த முடியாமல் அப்படியே இருக்கிறது. 32 ஆண்டுகளாக எனது மகனுக்கு, எனால் தண்ணீர் கூட கொடுக்க முடியவில்லை” என்றும் உருக்கமாகக் கூறியிருந்தார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தன்..!

இந்நிலையில் சாந்தனுக்குக் கடந்த ஜனவரி 24-ம் தேதி கல்லீரல் நலம் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சாந்தனுக்கு, கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் காலமானார் சாந்தன்

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 28, 2024) அதிகாலை சாந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலை 7:50 மணியளவில் காலமானார்.

சில தினங்களுக்கு முன்னர்தான் சாந்தன் இலங்கை செல்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன்படி சாந்தன் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதி கடிதத்தைத் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசு சில தினங்களுக்கு முன்னர் அனுப்பியிருந்தது.

இலங்கைக்கு கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல்!

இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தனின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கோமா நிலைக்குச் சென்றதாகவும், தகவல் வெளியானது. அடுத்த சில மணி நேரத்தில் சாந்தன் காலமானார் என்ற செய்தி வெளியானது.

இந்நிலையில் சாந்தனின் உடலை அவருடைய பூர்வீகமான இலங்கை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையிலிருந்து விடுதலை ஆகியும், தாய் நாடான இலங்கைக்குச் செல்ல முடியாமல் தமிழகத்தில் அவர் உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.