EPS, S.Valrmathi x page
தமிழ்நாடு

S.வளர்மதியை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ்.. தொடர்ந்து சரியும் அதிமுக கூடாரம்!

எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அக்கட்சியிலிருந்து விலகி, நாளை தவெகவில் இணையவுள்ளனர்.

Prakash J

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் பெருத்த தோல்வியடைந்த அதிமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவின் ஒரு தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. சட்டமன்றத்தில் தனிக்கட்சிபோல செயல்பட்டதுடன், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் செய்தனர். இதனால், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்ததுடன், அந்தப் பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமித்தார் எடப்பாடி கே.பழனிசாமி. தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பழனிசாமி பக்கம் வந்தார்கள். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் பறித்த பதவிகளை மட்டும் திரும்ப வழங்காமலிருந்தார் கே.பழனிசாமி.

எனினும், சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு, அவர்களுக்கு பொறுப்பு வழங்கினார் பழனிசாமி. ஆனாலும் இதில் அவர்களுக்கு அதிருப்தி நிலவுவதாகவும், அவர்களும் இபிஎஸ்ஸுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து போட்டியிட்ட பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தவிர அதிமுகவின் முகங்களாக அறியப்பட்ட வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜ் உள்ளிட்ட தலைவர்களும் தவெகவில் ஐக்கியமாகினர். தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் ரவி, பரமக்குடி முருகேசன் மற்றும் நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்தனர். அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏவான விஜயதாரணியும் பாஜகவில் இருந்து விலகி, தவெகவில் போய் இணைந்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அக்கட்சியிலிருந்து விலகி, நாளை தவெகவில் இணையவுள்ளனர். இந்த நிலையில், அதிமுகவின் இன்னொரு முகமாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, அக்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர், கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர், கட்சி மாறுவது குறித்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் அவரும் நாளை தவெகவில் இணையவிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.