\
9 More Leaders Against EPS? AIADMK to Split Again?
எடப்பாடி பழனிசாமிpt web

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மேலும் 9 பேர்.. மீண்டும் உடையும் அதிமுக?

ஏற்கெனவே வகித்த பதவிகளை கொடுக்காமல் தங்கள் விருப்பப்படி அளித்த பதவிகள் வேண்டாம். ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக தொடர்வோம் எனவும் அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
Published on

பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை. மாவட்டச் செயலர் பதவி வழங்காததால் அதிருப்தியில் வேலுமணி தரப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவின் ஒரு தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. சட்டமன்றத்தில் தனிக்கட்சிபோல செயல்பட்டதுடன், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் செய்தனர். இதனால், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்ததுடன், அந்தப் பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமித்தார் எடப்பாடி கே.பழனிசாமி. தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பழனிசாமி பக்கம் வந்தார்கள். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் பறித்த பதவிகளை மட்டும் திரும்ப வழங்காமலிருந்தார் கே.பழனிசாமி. எனினும், சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு, அவர்களுக்கு பொறுப்பு வழங்கினார் பழனிசாமி. எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியும், தங்கமணி, கருப்பணன், கே.பி.அன்பழகன், காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆனாலும் இதில் அவர்களுக்கு திருப்தி இல்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணிபுதிய தலைமுறை

இந்த நிலையில், பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை. மாவட்டச் செயலர் பதவி வழங்காததால் அதிருப்தியில் வேலுமணி தரப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், புதிதாக வழங்கப்பட்ட பதவிகள் வேண்டாம் என அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமிக்கு அவர்கள் எழுதியுள்ளனர். ஏற்கெனவே வகித்த பதவிகளை கொடுக்காமல் தங்கள் விருப்பப்படி அளித்த பதவிகள் வேண்டாம். ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக தொடர்வோம் எனவும் அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

மேலும், "விலக்கப்பட்டவர்களுக்கு உறுதி அளித்தபடி மீண்டும் அவர்கள் வகித்த பதவி வழங்கப்படவில்லை; பொதுச்செயலராக நீங்கள் எடுத்த தவறான முடிவால் 2021, 2024 மற்றும் 2026 தேர்தல்களில் அதிமுகவுக்கு தொடர் தோல்வி. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக எனும் ஆல விருட்சம் உங்களின் தவறான முடிவுகளால் கரைகிறது" என எஸ்.பி.வேலுமணி உட்பட நிர்வாகிகள் 9 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

ஏற்கெனவே சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையவிருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், இவ்விவகாரம் அக்கட்சியில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது. அதேபோல், அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இபிஎஸ், ”துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com