செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

இது செங்கோட்டையன் யுத்தம்.. என்ன நடக்கிறது அதிமுகவில்? நிர்வாகிகளின் கருத்துகள்...

தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான செங்கோட்டையனின் யுத்தத்தின் காரணம் என்ன?

இரா.செந்தில் கரிகாலன்

“நம்ம கட்சி இப்படி தொடர்ச்சியா தோல்வியடைஞ்சிகிட்டே போறது நல்லா இல்லண்ணே.., கட்சியை ஒண்ணு சேர்க்காம, கூட்டணியை சரி பண்ணாம நாம ஜெயிக்குறது கடுமையான சவாலா மாறிடும்ணே.., ஏற்கெனவே, 2021 தேர்தல கோட்டைவிட்டோம்.. 2026 -ஐயும் கோட்டை விட்றக்கூடாதுண்ணே.., நாங்க எவ்வளவோ பேசிப்பார்த்துட்டோம் எதுவும் நடக்குற மாதிரி தெரியலண்ணே.., நீங்கதான் எங்க எல்லோரையும்விட மூத்த நிர்வாகி, நீங்கதாண்ணே அவருக்கு புத்தி சொல்லணும்”

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், மற்றொரு முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையனிடம் கொட்டித் தீர்த்த வார்த்தைகள் இவை. அதன் எதிர்வினைதான், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான செங்கோட்டையனின் யுத்தம் என்கிறார்கள் விபரம் அறிந்த அதிமுக நிர்வாகிகள். என்ன நடக்கிறது? விரிவாகப் பார்ப்போம்..,

செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்துவதன் காரணம் என்ன?

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திகடவு திட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதாக அன்றைய நாளே சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அதற்கு அடுத்தநாள், கோபிச்செட்டிப் பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.ஏ.செங்கோட்டையனிடம் பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கேள்வியெழுப்ப, “விழா மேடை, விளம்பரப் பலகையில், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் படங்கள் இல்லாமல் இருந்ததே நிகழ்ச்சிக்குச் செல்லாததற்குக் காரணம், மற்றபடி நான் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கவில்லை” என விளக்கமளித்தார்.

செங்கோட்டையன்

செங்கோட்டையன் விளக்கமளித்த பிறகும் தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் அடங்கவில்லை; மாறாக மிகப்பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறியது.., ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இரு அணிகள் ஒருங்கிணைந்த பிறகும், செங்கோட்டையனுக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஓ.பி.எஸ்ஸை கட்சியை விட்டு நீக்கிய பிறகும் நிர்வாகிகள் மறு சீரமைப்பு நடைபெற்றது. அப்போதும், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி போன்றோர் துணைச் செயலாளர்கள் ஆனார்களே தவிர செங்கோட்டையனுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. அந்த அதிருப்தியில்தான் தற்போது செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்துகிறார் என்றும் சொல்லப்பட்டது. தவிர, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழா அழைப்பிதழிலும், முன்னாள் அமைச்சர், எஸ்.பி.வேலுமணிக்குக் கீழ் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயர் இடம் பெற்றதும் அவர் அதிருப்திக்குக் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி வேறு சில காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் விபரம் அறிந்த அதிமுக நிர்வாகிகள்..,

அதிமுக நிர்வாகிகள் சொல்வதென்ன?

“கடந்த ஜூலை மாதம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எங்கள் பொதுச் செயலாளர் வீட்டில், அவரை செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய ஆறு பேரும் சந்தித்த விவகாரம் அனைவரும் அறிந்த விஷயம்தான். அப்போது ஆறு பேரும் முன்வைத்த முக்கியமான கோரிக்கையே, பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்கவேண்டும் என்பதுதான். ஆனால், அப்போது எங்கள் பொதுச் செயலாளர் பிடிகொடுக்கவில்லை. அப்போது ஏன்? தற்போதுவரை அவர் பிடிவாதமாகவே இருக்கிறார். ‘தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைத்துவிடலாம் யாரும் கவலைப்படவேண்டாம்’ என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

இரட்டை இலை, எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையம்

மறுபுறம், இரட்டை இலைச் சின்ன விவகாரம் மிகத் தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது கட்சி இருக்கிற நிலையில் சின்னமும் முடக்கப்பட்டுவிட்டால் அவ்வளவுதான். அதேவேளை ‘அனைவரையும் ஒன்றிணைத்து, நீங்களே பொதுச் செயலாளராகக் கூட இருங்கள்’ என மீண்டும் வேலுமணியும், தங்கமணியும் பேசிப்பார்த்தார்கள். ஆனால், அதற்கும் இ.பி.எஸ் பிடிகொடுக்கவில்லை. இந்தநிலையில்தான், அவர்கள் செங்கோட்டையனைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ‘மூத்த தலைவரான நீங்கள் இப்படி அமைதியாக இருப்பது சரியல்ல. அவருக்கு நீங்கதான் எடுத்துச் சொல்லவேண்டும்’ எனப் பேசியிருக்கிறார்கள்.. அதனால்தான், இனி இ.பி.எஸ்ஸுடன் நேரடியாகப் பேசிப் பலனில்லை; போர்க்கொடியை உயர்த்திவிட வேண்டியதுதான் என செங்கோட்டையன் முடிவெடுத்துவிட்டார். இனியும் அது தொடரும் என்கிறார்கள்.

திமுக செய்யும் சதி

இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியுடன் பேசினோம்.. அவர் கூறியதாவது, “நீங்கள் நினைப்பதுபோல் பிரச்னைகளோ, குழப்பங்களோ கட்சிக்குள் இல்லை. இது மிகப்பெரிய இயக்கம். மக்களுக்கான கட்சி, ஜனநாயகக் கட்சி. திமுகவின் அவலங்களை மக்களிடம் தொடர்ச்சியாக எடுத்துக்காட்டும்போது, அதிமுகவை பலவீனப்படுத்தினால்தான் நம் தவறுகள் மறைக்கப்படும் என திமுகவினர் நினைக்கின்றனர். இதை அவர்களுக்கு துணையாக இருக்கும் ஊடகங்களைக் கொண்டு மீண்டும் மீண்டும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அம்மாதிரி எந்தப் பிரச்னையும் எங்களிடையே இல்லை. தொடர்ச்சியான கள ஆய்வுக்கூட்டங்கள் நடக்கிறது. எழுச்சியுடன் இருக்கிறோம்., இந்த வேகத்தையெல்லாம் மட்டுப்படுத்த வேண்டுமென, திமுக செய்யும் சதிதான். இதை மிகப்பெரிய பிரச்னையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார்.

என்னைச் சோதிக்காதீர்கள்

இதுஒருபுறமிருக்க நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செங்கோட்டையன், “நான் செல்கின்ற பாதை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்த பாதை. அந்த தெய்வங்கள் இரண்டு பேரும்தான் எனக்கு வழிகாட்டிகள். விவசாயிகள் பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நான் கலந்துகொள்ளவில்லை.

கே.ஏ.செங்கோட்டையன்

ஏனென்றால், அவர்கள் என்னை வாழ வைத்தவர்கள். பல்வேறு தியாகங்களை செய்த தலைவர்கள். எத்தனையோ பேர் ஏதேதோ சொல்கின்றனர். சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கட்டும். எனக்கு எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னைச் சோதிக்காதீர்கள் அதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கின்றேன். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம். தொண்டர்கள் மனவலிமையுடன் அதை எதிர்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த கருத்து ஓபிஎஸ், புகழேந்தி போன்றவர்களைக் குறிப்பிட்டே ஆர்.பி. உதயகுமார் கூறியதாகவும் கூறப்படுகிறது.