பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைப்பெற்று வருகிறது. இதில் கலந்துக்கொள்ள பல்வேறு மாவட்டங்கள் , மாநிலங்களிலிருந்து இளைஞர்களின் கூட்டம் கூடுவது வழக்கம்.
ஆனால், முதல்முறையாக வேறு நாட்டை சேர்ந்த ஒருவர், ஆர்வமோடு இதில் பங்கேற்கவிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆண்டனி கான்லான் என்ற அழைக்கப்படும் அந்த நபர், அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர். இவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக ஆரம்ப சுகாதாரத்தில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை முகாமில் அனைத்து பரிசோதனைகளையில் செய்துகொண்டார்.
ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதி. ஆண்டனிக்கோ 53 வயது என்பதால், வயது மூப்புகாரணமாக அவர் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக அவர் புதிய தலைமுறைக்கு அளித்திருந்த பேட்டியில், “ எனது பெயர் ஆண்டனி கான்லான். நான் அயர்லாந்தை சேர்ந்தவன். தற்போது சென்னையில்தான் 14 வருடமாக வசித்து வருகிறேன். அற்புதமான விளையாட்டு இது, அருமையான சூழலும் கூட.. மூன்று முறை ஜல்லிக்கட்டை நேரடியாக பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த ஆண்டு முதல்முறை இதில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதனால், மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், வயது மூப்பின் காரணமாக இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.