செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரம், சித்தார்ப்ட்டி, கண்டமனூர், கரிசல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செண்டுமல்லி பூ சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஆண்டிபட்டி மலர் சந்தைக்கு அவை கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.
தற்போது செண்டு மல்லி பூக்களின் வரத்து வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால், மலர் சந்தைக்கு இரண்டு மடங்கு அளவிற்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் முகூர்த்த நாள் இல்லாத காரணத்தால் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ 40 ரூபாய் வரை ஏலம் போன செண்டு மல்லி, தற்போது குறிப்பிட்ட அளவு மட்டுமே ஒரு கிலோ பத்து ரூபாய் அளவிற்கு ஏலம் போகிறது.
ஏலம் போகாமல் பூக்கள் தேக்கமடையும் நிலையில், நீண்ட நேரம் காத்திருந்தும் விலை கிடைக்காமல் ஏமாற்றமடையும் விவசாயிகள், வேறு வழி இன்றி கொண்டமநாயக்கன்பட்டி- மதுரை சாலையின் ஓரத்தில் பூக்களை கொட்டி விட்டுச் சென்றுள்ளனர். மனம் வீசும் பூக்கள் சாலையோரத்தில் குப்பை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ள காட்சி பார்ப்பவர்கள் மனதை வேதனையடையச் செய்துள்ளது.