தூத்துக்குடி: நவதிருப்பதி கோயில்களில் மனமுருகி தரிசனம் செய்த வெளிநாட்டு பக்தர்கள்
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றி அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் டோக்கியோ, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் உகாண்டா ஆகிய எட்டு நாடுகளில் இருந்து 39 பேர் ஆன்மிக சுற்றுலா வந்திருந்தனர்.
அவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நவதிருப்பதி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி நேற்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில், நத்தம் விஜயாசனர் பெருமாள் கோயில், திருப்புளியங்குடி காசினிவேந்த பெருமாள் கோயில், தென்திருப்பேரை மகரநெடுங்குழை காதர் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து அங்குள்ள சிற்பங்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சிறுவர், சிறுமிகள் சிலம்பம் விளையாடுவதை ஆர்வத்துடன் கண்டு ரசித்த வெளிநாட்டினர், திருப்புளியங்குடி காசினிவேந்த பெருமாள் கோயிலில் பசு மாடுகளுக்கு ஆர்வத்துடன் உணவளித்து மகிழ்ந்தனர்.